கொடைக்கானலில் பலாப்பழ சீசன் தொடக்கம்
கொடைக்கானலில் பலாப்பழ சீசன் தொடங்கியது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அடுக்கம், பெருமாள்மலை, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, ஊத்து, பண்ணைக்காடு, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஆண்டில் 2 முறை காய்கள் காய்க்கும் தன்மை கொண்டவை. தற்போது கொடைக்கானலில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பலா மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதில் அடுக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்களில் காய்க்கும் பலாப்பழங்கள் மிகவும் சுவை கொண்டது.
இந்தநிலையில் மலைப்பகுதியில் பலாப்பழங்களை பறித்து விற்பனைக்காக பல்வேறு இடங்களில் சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதேபோல் வெளியூர்களுக்கும் பலாப்பழங்களை விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.