பலாப்பழங்கள் வரத்து மேலும் அதிகரிப்பு
கும்பகோணத்துக்கு பலாப்பழங்களின் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
கும்பகோணத்துக்கு பலாப்பழங்களின் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
சீசன் தொடங்கியது
முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். இந்தப் பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. ஆண்டுதோறும் மே மாதத்தில் தொடங்கி, செப்டம்பர் மாத இறுதியில் இதன் சீசன் முடிவு பெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் பலாப்பழ சீசன் தொடங்கியது.
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழம் செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது. இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிக அளவில் பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பலாப்பழங்களை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் அதிகரிப்பு
அந்த வகையில் கும்பகோணத்துக்கும் வியாபாரிகள் விற்பனைக்காக பலாப்பழங்களை கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கும்பகோணத்துக்கு வரும் பலாப்பழங்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஒரு முழு பலாப்பழம் அதன் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.250 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்தில் பலாப்பழங்களின் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நடுத்தர பலாப்பழங்கள் (அதிக சுளை இல்லாத பழங்கள்) ரூ.200 முதல் விற்பனை செய்யப்படுகிறது. பழத்தின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனைசெய்து வருகிறோம். விலை தற்போது குறைவாக உள்ளது. ஆனால் பழத்தின் சீசன் முடியும் காலத்தில் விலை அதிகளவில் இருக்கும்' என்றனர்.