ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு


ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்  8 பேர் சிறைபிடிப்பு
x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

கடலுக்குள் மீன்பிடிக்க...

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து பஞ்சவர்ணம் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், தமிழ்ச்செல்வன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜி (28), அஞ்சப்பன் மகன் தினேஷ் (26), குருநாதன் மகன் ரஞ்சித் (27), சாமிநாதன் மகன் பக்கிரிச்சாமி (45), மருதையா மகன் கார்த்திக் (27) ஆகிய 6 பேரும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

விசைப்படகு பழுது

இவர்கள் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது விசைப்படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே அதனருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 4 பேரில், சிவக்குமார் மகன் கமல் (25), சுருளி மகன் புனுது (41) ஆகிய 2 பேரும் பழுதாகி நின்ற தமிழ்ச்செல்வன் படகில் ஏறி பழுதினை சரி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மற்ற 2 பேரும் அவர்கள் வந்த படகில் அங்கிருந்து சென்று விட்டனர்.

8 மீனவர்கள் கைது

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் 8 பேருடன் பழுதடைந்த படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை செய்ய கோரிக்கை

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story