2 பேருக்கு சிறை தண்டனை

ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தூங்கும்போது வீட்டிற்கு தீவைத்த வழக்கில் 2 பேருக்கு கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தூங்கும்போது வீட்டிற்கு தீவைத்த வழக்கில் 2 பேருக்கு கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
வீட்டுக்கு தீ
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது கீழநாகாச்சி கிராமம். இந்த ஊரை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ராமநாதன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் மகன், மகள்களுடன் கடந்த 2009-ம் ஆண்டு மே 29-ந் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்கு யாரோ தீ வைத்து உள்ளனர்.
தீ மளமளவென எரிந்ததை கண்டு அலறி அடித்துக்கொண்டு வெளியில் சென்று பார்த்தபோது 9 பேர் தீவைத்துவிட்டு ஓடியுள்ளனர். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மேற்கண்ட வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம், 12 ½ பவுன் தங்க நகை, டி.வி. பிரிட்ஜ், ரேஷன்கார்டு, வீட்டு பத்திரம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது.
முன்விரோதம்
இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் கொண்டு மேற்கண்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராமநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழநாகாச்சி ஆண்டிராஜ் மகன் முனியராஜ் (வயது52), காளிமுத்தன் மகன் ஆண்டிராஜ் (50) உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாசன் இந்த வழக்கில் முனியராஜ், ஆண்டிராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்றவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
உத்தரவு
இந்த வழக்கில் 2 பேரின் அபராத தொகை ரூ.10 ஆயிரத்தில் ரூ. 8 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட ராமநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதால் அவரின் மனைவி மாரியம்மாளுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார்.