ஓசூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-ஓசூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
ஓசூர் அருகே விவசாயியின் கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து ஓசூர் கோர்ட்டில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
ஓசூர்:
விவசாயி கொலை
ஓசூர் அருகே தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 55). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 16.6.2013 அன்று வெங்கடசாமி தனது நிலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை செய்து கொண்டிருந்தார். அவருடன் மனைவி முனிரத்னா மற்றும் மகன் முருகேசன் ஆகியோரும் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜப்பா, கோவிந்தன் மற்றும் ராஜப்பாவின் மகன் வெங்கடேசன் (33), உறவினர்கள் நாராயணன் (36), ஆஞ்சி (29) ஆகியோர் வெங்கடசாமியிடம் சண்டை போட்டுள்ளனர். பின்னர் அவரது கழுத்தை மாடு கட்டும் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து வெங்கடசாமியின் மனைவி முனிரத்னா பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜப்பா, வழக்கு நடந்து வந்த நிலையில் இறந்துவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தன், வெங்கடேசன், நாராயணன், ஆஞ்சி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு வழங்கினார்.