2 பேருக்கு 7 ஆண்டு சிறை
திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). இவர் திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 1-11-2019 அன்று இரவு கே.செட்டிப்பாளையம் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த மகாராஜா (25), பிரவீன்குமார் (20) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். கார்த்திகேயன் கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த இருவரும் சேர்ந்து பாட்டிலை உடைத்து கார்த்திகேயனை தாக்கினார்கள். இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து மகாராஜா, பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலைமுயற்சி குற்றத்துக்காக மகாராஜா, பிரவீன்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார்.