தனியார் பள்ளி பஸ் கிளீனருக்கு 10 ஆண்டு சிறை
9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் பள்ளியின் பஸ் கிளீனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் பள்ளியின் பஸ் கிளீனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 24). இவர் தனியார் பள்ளிக்கூட பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி 13 வயதுடைய 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அறிவழகன் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அறிவழகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் போலீசார் சார்பில் கோர்ட்டில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அறிவழகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.