லாரி டிரைவருக்கு 2¼ ஆண்டு சிறை தண்டனை
சேலம் அருகே விபத்தில் தொழிலாளி இறந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 2¼ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் சேனைபாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44), தறி தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி சுரேஷ் என்பவருடன் மொபட்டில் ராக்கிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுரேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (28) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்ததால் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் லாரி டிரைவர் அர்ஜூனுக்கு 28 மாதம் (சுமார் 2¼ ஆண்டு) சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.