பெண் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை


பெண் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை
x

கஞ்சா கடத்தல் வழக்குகளில் கைதான பெண் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மதுரை

கஞ்சா கடத்தல் வழக்குகளில் கைதான பெண் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

காரில் 120 கிலோ கஞ்சா

வெளி மாநிலத்தில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வருவதாக கடந்த 2015-ம் ஆண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் கஞ்சா மூடைகள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் மொத்தம் 120 கிலோ என தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆனையூரைச்சேர்ந்த மனோகரன் (வயது 39), மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (38), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (25) ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜரானார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.

பெண்ணுக்கு தண்டனை

இதேபோல தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ்நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் 12 கிலோ கஞ்சாவுடன் நின்ற பெண்ணை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த விஜயா (53) என்பது தெரிந்தது.

இந்த வழக்கும் மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விஜயா மீதான குற்றச்சாட்டுகளையும் அரசு வக்கீல் தங்கேஸ்வரன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story