சிறுமி பாலியல் பலாத்காரம்:கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தர்மபுரி
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). கோவில் பூசாரி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது கோவில் பூசாரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.
13 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.