சிலை திருட்டு வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிலை திருட்டு வழக்கு தொடர்பாக 4 பேருக்கு கும்பகோணம் கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிலை திருட்டு வழக்கு தொடர்பாக 4 பேருக்கு கும்பகோணம் கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிலைகளை கைப்பற்றிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2012-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி சிலைகளை விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் காரைக்குடி விசாலம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 42), காந்திபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(41), முத்துக்குமார்(41), திருப்பத்தூரை அடுத்த கண்டிரமாணிக்கத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி (54) ஆகியோரிடம் இருந்து விநாயகர், அம்மன் சிலைகள், 1 கிருஷ்ணர், முருகன், தேவி, சண்டிகேசுவரர் உள்பட மொத்தம் 8 சிலைகளை கைப்பற்றி 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் இந்த சிலைகள் காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் உள்ள உதயநாத ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
சிறை தண்டனை
இந்த சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமார், சிவக்குமார், முத்துக்குமார், வெள்ளைசாமி ஆகிய 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.