கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்தவர் சிறையில் அடைப்பு


கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்தவர் சிறையில் அடைப்பு
x

குறைந்த விலையில் இரும்பு கம்பிகளை தருவதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர்

கட்டிட ஒப்பந்ததாரர்

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் வசிப்பவர் வெங்கடேசன், கட்டிட ஒப்பந்ததாரர். இவரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மர்ம ஆசாமி ஒருவர் தன்னை இரும்பு கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகளை குறைந்த விலைக்கு வழங்குவதாக கூறினார். இதனை உண்மை என்று நம்பிய வெங்கடேசன் கம்பிகளை ஆர்டர் செய்தார்.

இதையடுத்து பெரம்பலூரில் உள்ள ஒரு கடையில் கம்பி ஆர்டர் செய்த அந்த ஆசாமி, கடைக்காரரின் வண்டியிலே கம்பி லோடு ஏற்றி வந்து ஒப்பந்தக்காரர் வெங்கடேசன் வேலை செய்யும் கட்டிடத்தில் இறக்கிவிட்டு, மீதமுள்ள கம்பி லோடுடன் வண்டியை வேறு இடத்திற்கு சென்று நிற்க சொல்லிவிட்டு, வெங்கடேசனிடம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த ஆசாமி தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டார்.

கைது

இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த வெங்கடேசன் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் வாணி (இணைய குற்றப்பிரிவு) தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசாமி தேனி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து, தேனி மாவட்டத்திற்கு சென்ற போலீசார், போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் புது காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் நாகராஜ் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story