சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய ரவுடிக்கு சிறை தண்டனை


சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய ரவுடிக்கு சிறை தண்டனை
x

சங்கரன்கோவிலில் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய ரவுடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ரமேஷ் கண்ணன் (வயது 27). இவர் கடந்த மே மாதம் 8-ந் தேதி சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முன்னிலையில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இவர் தனது செல்போனில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் ஆடியோவை சமூக வலைதளங்களில் தனது நண்பர்களுக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் விசாரணை நடத்தி ரமேஷ் கண்ணனை கைது செய்தார்.

ரமேஷ் கண்ணன் மீது சின்னகோவிலான்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், ராஜபாளையம், கழுகுமலை, திருவேற்காடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளன. மேலும் சின்னகோவிலாங்குளம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது ரவுடி பட்டியல் உள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதால் ரமேஷ் கண்ணன் நன்னடத்தை விதிகளை மீறியதாக சங்கரன்கோவில் உதவி கலெக்டருக்கு மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி கலெக்டர் டாக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி, ரமேஷ் கண்ணனை ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story