வாலிபருக்கு சிறை தண்டனை
மோட்டார் சைக்கிள் திருட்டு, சிறையில் இருந்து தப்பிய வழக்குகளில் வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூடலூர்,
மோட்டார் சைக்கிள் திருட்டு, சிறையில் இருந்து தப்பிய வழக்குகளில் வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறையில் இருந்து தப்பினார்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து ஹர்ஷத் கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக புளியம்பாறை கத்தரித்தோடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் 2019-ம் ஆண்டு தியாகராஜன் சிறையில் இருந்து தப்பி சென்றார்.
சிறை தண்டனை
இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி பல இடங்களில் தேடினர். பின்னர் அவரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தியாகராஜன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை கூடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், சிறையில் இருந்து தப்பி சென்ற வழக்கில் 3 மாத சிறை தண்டணையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி சசின் குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் அருண் பாண்டியன் ஆஜரானார்.