ஜனவரி 21-ந் தேதி தடங்கத்தில் ஜல்லிக்கட்டு விழா-பேரவை கூட்டத்தில் தீர்மானம்
நல்லம்பள்ளி:
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தர்மபுரி மாவட்ட அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி கால்கோல் நடும் பணி, பூமிபூஜை நிகழ்ச்சி நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 800 காளைகள் மற்றும் 1,000 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க உள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் பெரியண்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் தடங்கம் கந்தசாமி, ஓ.கே.எஸ்.குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சண்முகம், தங்கமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.