தடங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு கால்கோள் நடும் நிகழ்ச்சி
நல்லம்பள்ளி:
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தர்மபுரி மாவட்ட அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் வருகிற 21-ந் தேதி 2-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கால்கோள் நடுதல், பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு, கால்கோள் நட்டு, பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பெரியண்ணன், துணைத் தலைவர்கள் கந்தசாமி, குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தர்மசெல்வன், நாட்டான் மாது, தங்மணி, ஏ.எஸ்.சண்முகம், ஆறுமுகம், பா.ம.க. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும், 1,000 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாக, ஜல்லிகட்டு பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.