விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்


விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தாா்.

சிவகங்கை

சிவகங்கை,

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தாா்.

ஆலோசனை கூட்டம்

பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நாகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், ஆதிதிராவிட நல அலுவலர் மங்களநாதன், மற்றும் மாவட்டம் முழுவதையும் சேர்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.:- மாவட்டத்தில் முதற்கட்டமாக பொங்கல் விழாவினை முன்னிட்டு, சிராவயல் மற்றும் கண்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. மற்றப்பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஒப்புதல் பெற வேண்டும்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடக்கும் நாள், இடம் ஆகியவற்றையும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் விவரங்கள் போன்ற பட்டியலுக்கும் கலெக்டரிடம் முன்னதாக ஒப்புதல் பெற வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களிடம் காளைகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். காளைகளுக்கு ஊக்க மருந்து, போதை மருந்துகள், மனநிலை மாற்றும் பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சியை திறந்தவெளியில் நடத்த வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு நடத்தும் இடமான காளைகள் கட்டும் பகுதி, காளைகள் உடல்தகுதி பரிசோதனை பகுதி, காளைகளை தழுவும் பகுதி, காளைகள் ஓடு பாதை, காளைகள் அடைபடும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி, தகுதியிழப்பு செய்த காளைகளை அடைக்கும் பகுதி பிரிக்கப்பட வேண்டும்.

மேலும், காளைகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர், மேற்கூரை அமைக்க வேண்டும். இப்பகுதியில் மாட்டின் உரிமையாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் மட்டுமே இருத்தல் வேண்டும். 20 நிமிட ஓய்வுக்கு பிறகு காளைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும். மேலும், பார்வையாளர்கள் பகுதி காளை தழுவும் இடத்திலிருந்து குறைந்தபட்சம் 25 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறையினரின் தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். .

துன்புறுத்தக்கூடாது

ஓடிவரும் காளைகளையோ, ஓடி முடித்த காளைகளையோ தொடுதல் மற்றும் துன்புறுத்துதல் கூடாது. மாடுபிடி வீரர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே தழுவுதல் வேண்டும். காளையை தழுவும் போது காளையின் திமிலை தவிர, கொம்புகளையோ, வால் பகுதியையோ, பிடிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.

காளைகள் ஓடுபாதையை மறைத்து நிற்பதை தவிர்க்க வேண்டும். வாடிவாசல் முன் மாடுபிடி வீரர்கள் நின்று காளைகள் வெளிவரும் பாதையை தடுக்க கூடாது. காளைகள் விளையாடும் பகுதியான 15 மீட்டருக்கு அப்பால் காளைகள் ஓடும் பகுதியில் மாடுபிடி வீரா்கள் காளைகளை தொட அனுமதி இல்லை. நிபந்தனைகளை மீறும் மாடுபிடி வீரா்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story