இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்


இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 37 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தரம்தூக்கி பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 174 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 910 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

37 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மூர்த்தி (வயது 30), முருகேசன் (40), கமலேஷ் (20), சரத்குமார் (23), சுப்பிரமணி (47), மாரிமுத்து (35), குருமூர்த்தி (19), பாரதி (22), நாகராஜ் (24), சேகர் (38) உள்பட 37 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதன் (20), சின்னத்தம்பி (44), கனகவேல் (35), நிதி (18), கமலேஷ் (20), சுதர்சன் (23) உள்ளிட்ட 11 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், குக்கர், ஹாட்பாக்ஸ், அயன்பாக்ஸ், சில்வர் அண்டா, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story