அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
மதுரை,
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றதாக திகழ்வதால் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்..அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு உறுதி செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது :
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வளாகம் அமைக்க சட்டசபையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக 2 முறை இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தை அரசு ஒரு போதும் எடுக்காது. இந்த இடத்தை சீர் செய்து விரைவில் பணியை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் இதற்கான நில அளவை பணி தொடங்கப்படுகிறது. 66 ஏக்கரில் மலையில் இருந்து தண்ணீர் வரும் ஒரு குளமும் உள்ளது. அந்த குளத்தையும் பராமரித்து ஜல்லிக்கட்டு அரங்கில் கலந்து கொள்ள வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்