கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை-மயில், ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை-மயில், ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் கடந்த 8-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்று அருகில் உள்ள சிறிதளவு தண்ணீர் இருந்த 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை அறியாமல் ஜல்லிக்கட்டு களையை அப்பகுதியில் தேடி வந்தனர். இதையடுத்து நேற்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் ஜல்லிக்கட்டு காளை கிடந்ததை பார்த்து கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஜல்லிக்கட்டு காளையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதேபோல் கந்தர்வகோட்டை வங்காரஓடை தெருவில் உள்ள கிணற்றில் விழுந்த மயில், அம்மா புதுப்பட்டி ராமராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி அப்பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து மயில், ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.