1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் தயார்


1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் தயார்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. அதற்காக 1,000 காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அலங்காநல்லூரில் நாளை மறுநாள் போட்டி நடக்கிறது.

மதுரை

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும்.

அனல் பறக்கும் போட்டிJallikattu festival

பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அனல்பறக்கும்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. நாளை பாலமேட்டில் நடக்க இருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒருவாரமாகவே மும்முரமாக நடந்து வந்தன.

தயார் நிலை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை யார் நடத்துவது? என்பதில் ஏற்பட்ட இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்து, கடந்த 2 நாட்களாக அங்கு பணிகள் வேகவேகமாக நடைபெற்று நிறைவு பெற்றன. வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை நேற்று தயார்படுத்தப்பட்டன. வீரர்கள் காயம் அடையாமல் இருக்க தேங்காய் நார் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பரப்பப்பட்டது.

மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும் தடுப்பு வேலிகள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.

காயம் அடைவோருக்கு முதல் உதவி அளிக்க சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 டாக்டர்கள், 50 நர்சுகள், உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர்.

காளைகளை பரிசோதித்து அனுமதிக்க கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார், உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் உள்ளனர்.

320 மாடுபிடி வீரர்கள்

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளம் மூலம் நடந்தது.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் போட்டிப்போட்டு பதிவு செய்திருந்தனர். இதில் அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன.

ஒருவருக்கு ஒரு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே அனுமதி என்ற முறையில் வீரர்கள் பதிவு நடந்து இருப்பதால், இதில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், காளைகள் பாலமேடு, அலங்காநல்லூருக்கு வரமாட்டார்கள் என்றும், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு எத்தனை வீரர்கள், காளைகள் என்பது பற்றிய விவரம் இன்றுதான் (ஞாயிற்றுக்கிழமை) தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். அதே போல் அலங்காநல்லூருக்கான வீரர்கள், காளைகள் விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

பரிசுகள் ஏராளம்

அவனியாபுரத்தில் இன்று நடக்க இருக்கும் போட்டியில் மாடுபிடி வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழுவினர் என சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன

1,300 போலீசார் பாதுகாப்பு

மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.


Next Story