சத்திரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது
அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் சத்திரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதனை 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் சத்திரப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதனை 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பரிசோதனை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதுதவிர மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக மேனேந்தல் மைதானத்தில் புகைப்பட கண்காட்சியை நடத்தினார். இதனை சுமார் 1 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில் மதுரை ஊமச்சிக்குளம் அடுத்துள்ள எம்.சத்திரப்பட்டியில், மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்து உள்ளார். அதன்படி இந்த ஜல்லிக்கட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி முன்னின்று செய்து வருகிறார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (இன்று) மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது.மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைபிடிக்கப் பட்டுள்ளன.
கார் பரிசு
போட்டியில் வெற்றிபெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக பிரிந்து கார் முதல் பரிசு, புல்லட் பைக் இரண்டாம் பரிசு, ஹீரோ பைக் மூன்றாம் பரிசு என முறையே வழங்கப்படும். அதேபோல, சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு 1 கிராம் தங்க நாணயம், வண்ணத் தொலைக்காட்சி, சைக்கிள் போன்ற எண்ணற்ற சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
திருவிழா போல நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கி மாலை வரை நடைபெறும். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.