துவரங்குறிச்சி அருகே ஜல்லிக்கட்டு


துவரங்குறிச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். மாடுகள் முட்டி 29 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பழையபாளையம கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவையொட்டி பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு கோவில் முன்பு உள்ள திடலில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 295 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 704 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

29 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், சேர், கடிகாரம், அண்டா, குடம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளையை மற்றொரு காளை முட்டியதில் படுகாயம்

ஸ்ரீரங்கம் அருகே உள்ள எரங்குடி முல்லை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது எதிரே வந்த மற்றொரு காளை முட்டியதில் இடது கண்ணில் பலத்த காயமடைந்து களத்திலேயே மயங்கி விழுந்தது. பின்னர் தட்டுத்தடுமாறி எழுந்து ஓடிய ஜல்லிக்கட்டு காளையை அதன் உரிமையாளர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பிடித்து கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை

வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டு அங்கிருந்து ஓடிவந்த சிவகங்கை மாவட்டம், கே.உடையாபட்டியை சேர்ந்த பழனி என்பவரது காளையை பிடிக்க துரத்திச்சென்றபோது செவல்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இது குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி காளையை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story