திருமயம் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்


திருமயம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர். மாடுகள் முட்டி 5 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சோழ பிடாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 60 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து திருமயம், புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story