குழந்தைகளை போல பாவித்து வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்


குழந்தைகளை போல பாவித்து வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்
x

குழந்தைகளை போல பாவித்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை குழந்தைகள் போல பாவித்து வளர்த்து வருகிறார்கள். மழையில் நனையாமல் இருப்பதற்காக செட் அமைத்து கொடுத்துள்ளதுடன், கொசு கடிக்காமல் இருப்பதற்காக மின் விசிறியும் பொருத்தி உள்ளனர். காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகள்

தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றதாகும்.

இதே போல் திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை

இந்த ஜல்லிக்கட்டை ஏறுதழுவல் என்றும் அழைப்பது உண்டு. ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடத்தப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும காளைகளை, இளைஞர்கள் விரட்டிச்சென்று அதன் திமிலை தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் வரை செல்வார்கள்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுகாளைகளை தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது குழந்தைகளை போல பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள். எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது.

30 காளைகள்

தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு காளைகள் வளர்க்கப்படுகிறது. இந்த கிராமத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாரம்பரியமாக, இந்த காளைகளை வளர்த்து வருகிறார்கள். மேலும் காளைகள் மழையில் நனையாமல் இருக்க செட் அமைத்தும் கொசுக்கடிக்காமல் இருப்பதற்கு மின்விசிறியும் பொருத்தி உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத காலங்களிலும் மாடுகளை முறையாக பராமரித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே உரிய பயிற்சிகளை தொடங்கி விடுகின்றனர்.

நீச்சல், நடைபயிற்சி

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உணவாக பருத்திகொட்டை, தவிடு, கடலை புண்ணாக்கு, உளுத்தம்பொட்டு, துவரம் பொட்டு, நாட்டுப்புல், வைக்கோல், சோளமாவு ஆகியவை தினமும் காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் வழங்கி வருகிறார்கள். மாடுகளின் கொம்பை போட்டிக்கு முன்னதாகவே சீவிவிட்டு மாடுகளுக்கு நீச்சல்பயிற்சி, அதிவேக நடைப்பயிற்சி, மண்குத்துதல், மாடு பாய்ச்சல் ஆகிய பயிற்சிக்கு தயார் செய்கின்றனர்,

மேலும் மாடுகளின் உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை பிரண்டை, பட்டமிளகாய், சின்னவெங்காயம், கடலைமிட்டாய் ஆகியவற்றையும் வழங்கி மாடுகளின் உடல் நலத்தையும் பாதுகாத்து வருகிறார்கள். மாடுகளை தங்கள் குழந்தைகள்போல் வளர்த்து எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கத்திலும், காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

3-வது தலைமுறையாக காளை வளர்ப்பு

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் பொட்டுவாச்சாவடியை சேர்ந்த பாஸ்கர் கூறியதாவது:-

எனது தாத்தா காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். தற்போது 3-வது தலைமுறையாக வளர்த்து வருகிறோம். மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல் என எங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலும் நாங்கள் காளைகளை கொண்டு செல்வோம். பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் வகையிலும், காளை இனங்களை பாதுகாக்கும் வகையிலும் வளர்த்து வருகிறோம். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதே பெருமை தான். தற்போது எங்கள் வீட்டில் மட்டும் 3 காளைகளை வளர்த்து வருகிறோம். போட்டிக்கு 2 மாதத்துக்கு முன்னே காளைகளை தயார் செய்ய ஆரம்பித்து விடுவோம். தினமும் 4 கி.மீ. நடை பயிற்சி அளிப்போம். 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிப்போம். போட்டியில் பங்கேற்று தங்களது காளைகள் பிடிபடாமல் இருந்தாலே அதற்கு ஒரு செல்வாக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story