மாவட்டத்தில், ஜல்சக்தி அபியான் திட்டத்தில் ரூ.83 கோடியில் 8 ஆயிரத்து 570 பணிகள்


மாவட்டத்தில், ஜல்சக்தி அபியான் திட்டத்தில்  ரூ.83 கோடியில் 8 ஆயிரத்து 570 பணிகள்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் ரூ.83 கோடியில் 8 ஆயிரத்து 570 பணிகள் நடந்து வருவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் இயக்குனர் சுப்ரதாபிரகாஷ் கூறினார்.

கிருஷ்ணகிரி

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரித்தல், நீர் மேலாண்மை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மத்திய அரசின் நிதி ஆயோக் இயக்குனர் சுப்ரதா பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் நிதி ஆயோக் இயக்குனர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் இதர துறைகள் மூலம் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.83 கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 570 பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 7 ஆயிரத்து 216 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீர் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளிடையே நீரின் அவசியம் குறித்து எடுத்துரைப்பதோடு, பல்வேறு போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு

பின்னர் நிதி ஆயோக் இயக்குனர், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் ஜல்சக்தி அபியான் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு மற்றும் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 922 மதிப்பில் புதிய மின் மோட்டார், பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

அப்போது தொழில்நுட்ப விஞ்ஞானி அஜய், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமார், உதயகுமார், மாது, கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன், உதவி பொறியாளர் (நீர்வளம்) கார்த்திகேயன், சத்தியநாராயணராவ், திப்பனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story