மரக்காணத்தில் ஜமாபந்தி நிறைவு விழா:ரூ.1.33 கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
மரக்காணத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
மரக்காணம்,
மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஒவ்வொரு குறுவட்டம் வாரியாக பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து ஜமாபந்தி நிறைவு விழா மரக்காணத்தில் உள்ள தனியார் திருமண மண்பத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகள் 317 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, ரூ1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தயாளன், பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் புஷ்பவள்ளி குப்புராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், மரக்காணம் தாலுகா பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.