ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி
சீர்காழியில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் 706 மனுக்கள் பெறப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார் நிறைவு நாளில் பூம்புகார், திருவெண்காடு, மேலையூர், கீழையூர், வானகிரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பட்டா மாறுதல், புதிய வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை உதவி கலெக்டர் அர்ச்சனாவிடம் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் 25 முதியோருக்கு முதியோர் உதவித்தொகை, ஐந்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, இரண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசுகையில், இந்த ஆண்டு ஜமாபந்தியில் 706 மனுக்கள் பெறப்பட்டுள்ளது இதில் தகுதியான மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் கணேசன் நன்றி கூறினார்.