ஜமுனாமரத்தூரில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
ஜமுனாமரத்தூரில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஜமுனாமரத்தூரில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வேங்கிகால் ஏரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு முதல் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்தாலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெள்ளம் போல் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை முதல் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
கால்வாய்கள் தூர்வாரும் பணி
மேலும் உபரிநீர் வெளியேறும் பகுதியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வேங்கிக்கால் ஏரி உபரிநீர் வெளியேறியதில் அருகில் குறிஞ்சி நகர், அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதுபோன்று இந்த ஆண்டும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டு மழைநீர் சென்ற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் அமைத்ததால் தற்போது மழைநீர் சாலையில் ஓடுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் போன்றவை நேற்றும் நடைபெற்றது. இதனை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஓடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை இனாம்காரியந்தல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையினால் கவுத்தி மலையில் இருந்து மழைநீர் இனாம்காரியந்தல் காலனி பகுதியில் புகுந்தது. இந்த மழைநீர் அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்ததால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி தவித்தனர். வீட்டிற்குள் புகுந்த மழை நீரை பாத்திரங்களை கொண்டு அள்ளி எடுத்து வெளியேற்றினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கவுத்தி மலையில் இருந்து மழைநீர் செல்லும் ஓடை கால்வாய்கள் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஜமுனாமரத்தூரில் அதிகபட்சம்
நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர்-63.6, கலசபாக்கம்-61.4, வந்தவாசி-47.9, செய்யாறு-37, ஆரணி-34, செங்கம்-32.2, திருவண்ணாமலை- 26.4, போளூர்-26, சேத்துப்பட்டு-25.7, வெம்பாக்கம்-24.5, தண்டராம்பட்டு-8.5 ஆகும்.