கேரளாவிற்கு ஜீப்பில் கடத்தல்:2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது
போடியில் இருந்து ஜீப்பில் கேரளாவுக்கு கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை சாவடி
தமிழக-கேரள எல்லையில் போடி அமைந்துள்ளது. இருமாநில எல்லையில் உள்ளதால் போதைப்பொருள், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக போடி முந்தல், போடிமெட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்ேபாது போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் அதிவேகமாக ஜீப் ஒன்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜீப்பை மறித்தனர். ஆனால் ஜீப் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் வாகனத்தில் ஜீப்ைப பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் முந்தல் சோதனை சாவடி முன்பு வந்தபோது ஜீப்பை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் பின்னால் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் மடக்கினர்.
அதன்பின்னர் போலீசார் ஜீப்பை சோதனை செய்தனர். அதில் 46 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அவர்கள், கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி பாரதி, சக்தி குமார், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த வனத்துரை, வீரபாண்டி ஆகியோர் என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி, ஜீப், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பதை பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். கைதான 5 பேர் மீதும் போலீஸ் நிலையங்களில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.