அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமயபுரம் கோவிலுக்கு...
உப்பிலியபுரத்தை அடுத்த தளுகை ஊராட்சி டி.பாதர்பேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வீரம்மாள் (வயது 63). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் பெருமாள் இறந்ததால் வீரம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் அதே தெருவைச் சேர்ந்த சங்கீதா (35) என்பவரது வீட்டிலும் மர்ம ஆசாமிகள் ஒரு பவுன் மோதிரம், வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
ரூ.2 லட்சம் திருட்டு
இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சப்பாணி. இவரது மனைவி வீரம்மாள் (63). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு தா.பேட்டையை அடுத்த வரகூரில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.
நேற்று மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ள சென்று பார்த்தபோது, பீரோவில் தனது மருமகள் சுதாவின் வேலை வாய்ப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.