அம்மன் கோவிலில் நகை கொள்ளை; 3 கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு
மணவாளக்குறிச்சி அருகே அம்மன் கோவிலில் நகையை கொள்ளையடித்து விட்டு, 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே அம்மன் கோவிலில் நகையை கொள்ளையடித்து விட்டு, 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை கொள்ளை
மண்டைக்காடு அருகே பெரியகுளம் எழுத்திட்டான்பாறையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்த கோவிலின் செயலாளராக அழகன்பாறை குன்னங்காடு பகுதிைய சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 43) உள்ளார்.
அவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி மாயமாகி இருந்தது. கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி கிருஷ்ணகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.