தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
நெல்லை அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருடப்பட்டது.
நெல்லை அருகே தாழையூத்து ஹவுசிங்போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜபிரம்மம் (வயது 48). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் காலையில் தனது உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு நேற்று காலையில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். நெல்லை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மற்றொரு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் தப்பியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.