நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கூடலூரில் கடன் பிரச்சினையால் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
கூடலூரில் கடன் பிரச்சினையால் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அவர் கூடலூரில் உள்ள நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் மணிகண்டன் பணியாற்றிய நகைக்கடையின் அருகே உள்ள மற்றொரு அறையின் கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதை நேற்று அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர் உள்ளே பார்த்தபோது, அங்கு மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
கடிதம் சிக்கியது
தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மணிகண்டன் கூறியுள்ளதாவது:-
நான் சீட்டு நடத்தி வந்தேன். இதில் சீட்டு எடுத்து விட்டு பலர் பணம் செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர். இதனால் மீதமுள்ளவர்களுக்கு பணம் வழங்க ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கினேன். அதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தேன். மேலும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் ஏமாற்றி விட்டனர். நான் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மற்றும் எனக்கு பணம் தராமல் ஏமாற்றியவர்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு உள்ளேன். இதனால் தற்கொலை முடிவை எடுத்தேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.