ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2023 1:28 AM IST (Updated: 26 Jun 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நகைக்கடை உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நகைக்கடை உரிமையாளர்

தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ரோஜாராஜசேகர் (வயது58). இவர் திருட்டு நகையை வாங்கி வந்ததாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை வந்து நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர் ரோஜாராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி லெட்சுமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் பொற்கொல்லர் சங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர் சங்கம் இணைந்து கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் ரோஜா ராஜசேகர், தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று இரவு 9.25 மணி அளவில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் ரோடு செட்டியக்காடு பகுதிக்கு வந்து ெகாண்டிருந்தது. அப்போது ரெயில் முன் பாய்ந்து ரோஜாராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதறியது.

இதுகுறித்து திருவாரூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டுக்கோட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் வேதைவேந்தன், ஜெகதீசன் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story