ஊத்தங்கரை அருகே விபத்து:கன்டெய்னர் லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலிகணவன்-மனைவி படுகாயம்
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே தறிக்கெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலியானார். மேலும் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
கன்டெய்னர் லாரி மோதியது
ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்றது. காரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் ஏழுமலை (வயது 36) மீது மோதியது.
மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீதும் கன்டெய்னர் லாரி மோதியது. இதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்தில் பலியானார். மேலும் சாலையோரம் நின்ற கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த சொக்கன் (45), இவரது மனைவி கல்பனா (40). ஆகியோர் மீதும் கன்டெய்னர் லாரி மோதியது.
போலீசார் விசாரணை
இதில் கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து சென்று இறந்த ஏழுமலையில் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.