நாகர்கோவிலில் ஒரே நாளில் 4 பெண்களிடம் 26 பவுன் நகை அபேஸ்


நாகர்கோவிலில் ஒரே நாளில் 4 பெண்களிடம் 26 பவுன் நகை அபேஸ்
x

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் ஒரே நாளில் 4 பெண்களிடம் 26 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் ஒரே நாளில் 4 பெண்களிடம் 26 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவி

பூதப்பாண்டி அருகே கடுக்கரையை சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவர் தினமும் பஸ் மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறார். நேற்று மதியம் கல்லூரி முடிந்ததும் அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். இந்த பஸ்சானது வேப்பமூடு சந்திப்பு அருகே வந்தபோது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் கல்லூரி மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அப்போது நகை கழன்று விழும்படியாக இருப்பதாக கூறினார். எனவே நகையை கழற்றி பேக்கில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதை நம்பி கல்லூரி மாணவி தனது 3½ பவுன் நகையை கழற்றி பேக்கில் வைத்தார். பின்னர் பஸ்சானது அண்ணா பஸ் நிலையம் வந்த பிறகு மாணவி பேக்கில் வைத்திருந்த தனது நகையை பார்த்தார். அப்போது நகையை காணவில்லை. மேலும் பேக்கின் அடிப்பகுதியும் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் நைசாக பேச்சுக்கொடுத்த மர்ம பெண் தான் கல்லூரி மாணவியின் நகையை திருடி சென்றிருக்கலாம் தெரியவந்தது.

மேலும் 3 பேரிடம்...

பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதே போல தென்தாமரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண் கோவில் திருவிழாவுக்காக வெளியூர் சென்று விட்டு நேற்று காலையில் நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் வந்து அரசு பஸ்சில் தென்தாமரைகுளத்துக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் பேக்கில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. அந்த நகையை பஸ்சில் பயணம் செய்த போது மர்ம பெண் திருடியிருக்கலாம் என தெரிகிறது.

இதேபோன்று தேரேகால்புதூரில் இருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்த 30 வயது பெண் அணிந்திருந்த 3½ பவுன் நகையையும் யாரோ மர்ம பெண் பறித்துள்ளார். அதாவது அந்த பெண் பஸ்சில் ஏறும்போது நகை இருந்துள்ளது. ஆனால் பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது நகையை காணவில்லை. மேலும் பீச்ரோடு தட்டான்விளையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வந்த சத்துணவு பெண் ஊழியரிடம் 4 பவுன் நகை பஸ்சில் வந்தபோது திருட்டு போனது.

டிப்-டாப் உடை அணிந்து...

நாகர்கோவிலில் ஒரே நாளில் அரங்கேறிய இந்த 4 நகை பறிப்பு சம்பவங்களில் மொத்தம் 26 பவுன் நகை திருட்டு போனது. இந்த திருட்டில் ஈடுபட்டது பெண்கள் தான் என்று கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் அருகில் நின்றபடியும், இருக்கையின் அருகில் உட்கார்ந்தபடியும் பயணம் செய்து லாவகமாக நகையை திருடி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் டிப்-டாப் உடை அணிந்து வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளது.

அண்ணா பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களில் தான் இதுபோன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நகை திருட்டில் ஈடுபடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story