2 இடங்களில் நகை திருட்டு
காரியாபட்டி அருகே 2 இடங்களில் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே 2 இடங்களில் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
6 பவுன் நகை திருட்டு
காரியாபட்டி அருகே வலுக்கலொட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பாண்டீஸ்வரி (வயது 40). இவர் 6 பவுன் செயினை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சாவியை பீரோவின் மேல் வைத்துள்ளார். பின்னர் முருகனும், பாண்டீஸ்வரியும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பாண்டீஸ்வரி பீரோவில் இருந்த 6 பவுன் நகையை பார்த்த போது நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியநாச்சி (வயது 55). இவர் இடைக்காட்டூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தனது மருமகளுக்கு போன் செய்து பாப்பாங்குளம் வீட்டில் உள்ள நாய்க்கு, கந்தசாமி என்பவரை சாப்பாடு வைக்க கூறியுள்ளார்.
இதையடுத்து கந்தசாமி, பெரியநாச்சியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் பெரியநாச்சிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் பெரியநாச்சி வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.