கடலூரில்ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வீட்டில் நகை திருடிய மருத்துவ உதவியாளர் கைது


கடலூரில்ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வீட்டில் நகை திருடிய மருத்துவ உதவியாளர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை திருடிய மருத்துவ உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்


கடலூர் செம்மண்டலம் தண்டபாணிநகரை சேர்ந்தவர் பாபு (வயது 72). ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இவருக்கு மருத்துவ உதவியாளர் தேவைப்பட்டது. இதையடுத்து அவரது உறவினரான புதுப்பாளையம் சஞ்சீவிராயன்கோவில் தெருவை சேர்ந்த பூவராகசாமி என்பவர் இது பற்றி தனியார் நர்சிங் ஏஜென்சி மூலம் மருத்துவ உதவியாளர் கேட்டார்.

அதன்படி அந்த ஏஜென்சி மூலம் திருச்சி மணப்பாறை பொத்தம்பட்டியை சேர்ந்த வீரமலை மகன் திருப்பதி (34) என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பாபு வீட்டில் மருத்துவ உதவி செய்து வந்த நிலையில், திடீரென அவரை காணவில்லை. இதனால் வீட்டில் உள்ள பொருட்கைள சரிபார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.2¼ லட்சம் ஆகும்.

கைது

இதை திருப்பதி திருடி விட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இது பற்றி பூவராகசாமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை தேடி வந்தனர். கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்த போது, ஒரு ஆட்டோவில் வந்து திருப்பதி இறங்கினார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் தான் நகையை திருடிச்சென்றதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 பவுன் நகையையும் மீட்டனர்.


Next Story