மேல்மலையனூர் அருகே2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
மேல்மலையனூர் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருடு போனது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 50). விவசாயி. நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கண்ணையன் வெளியூர் சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தையும், இதேபான்று, அருகில் இருந்த சாந்தி என்பவரது வீட்டில் 4 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுபற்றி அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரத்திலிருந்து போலீஸ் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.திண்டிவனத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் தட்சணாமூர்த்தி, சரவணன் ஆகியோர் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.