சுவரில் துளை போட்டு நகைக்கடையில் 20 பவுன், 25 கிலோ வெள்ளி கொள்ளை


சுவரில் துளை போட்டு நகைக்கடையில் 20 பவுன், 25 கிலோ வெள்ளி கொள்ளை
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே நகைக்கடையில் சுவரில் துளையிட்டு 20 பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே நகைக்கடையில் சுவரில் துளையிட்டு 20 பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைக்கடை

திருப்பத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு திருப்பத்தூருக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் கடையின் சுவரில் துளை போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தார்.

நகை, வெள்ளி கொள்ளை

அப்போது கடையின் பின்புறமாக துளையிடப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ரேஷ்மி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஆஞ்சநேயர் கோவில் வரை ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீஸ் வலைவீச்சு

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கடை மற்றும் சுவரில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story