அதிகாரிபட்டியில் மளிகை கடையில் 9 பவுன் நகை திருட்டு
அதிகாரிபட்டியில் மளிகை கடையில் புகுந்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிசென்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த அதிகாரிபட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவர் அங்கு திருமலைக்கேணி சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மனோகரன் தனது வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக மனோகரன் வந்தார். அப்போது கடையின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடைக்குள் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து மனோகரன் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச் சென்று திரும்பியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.