திண்டுக்கல் அருகே பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
திண்டுக்கல் அருகே பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்தனர்.
திண்டுக்கல் அருகே பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 45). இவர், நேற்று திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் சங்கிலி வாங்கினார். அதை ஒரு ைபயில் வைத்தார். பின்னர் திண்டுக்கல்-ஆலம்பட்டி அரசு பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எம்.கோவிலூர் பிரிவு அருகே வந்தபோது நகை பையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை பையை திருடிய மர்ம நபர் இடையில் உள்ள ஏதோ பஸ் நிறுத்தத்தில் இறங்கியது தெரியவந்தது.
இதையடுத்து காளீஸ்வரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.