சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் தூக்குப்போட்டு தற்கொலை-சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் உருக்கமான வீடியோ


சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் தூக்குப்போட்டு தற்கொலை-சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் உருக்கமான வீடியோ
x

சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு பேசிய உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம்

சூரமங்கலம்:

நகை மதிப்பீட்டாளர்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 50). இவர் சேலத்தில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி இமாகுலேட். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இமாகுலேட் தனக்கு தெரிந்த சிலருக்கு பணம் மற்றும் நகைகளை கடனாக கொடுத்துள்ளார். தற்போது மகன் மற்றும் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கொடுத்தவர்களிடம் கடனை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் கடன் வாங்கியவர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் மோகன்தாஸ் மற்றும் இமாகுலேட் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை மோகன்தாஸ் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோகன்தாஸ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே மோகன்தாஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், தன்னுடைய மனைவி எனக்கு தெரியாமல் சிலருக்கு பணம் மற்றும் நகைகளை கடனாக கொடுத்துள்ளார். தற்போது குழந்தைகளின் கல்வி செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் வாங்கியவர்களிடம் அந்த பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் பணம் தர மறுப்பதுடன் எங்களை மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேசி உள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story