தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் நல்லூர் சாலை சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் ஜெபராஜ் லிவிங்ஸ்டன் (வயது 31). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பனைகுளத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் குடும்பத்துடன் ஓசூருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெபராஜ் லிலிங்ஸ்டன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். உள்ளே பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன.
13 பவுன் நகைகள் திருட்டு
மேலும் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெபராஜ் லிவிங்ஸ்டன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பீரோ மற்றும் கதவில் பதிவாகி இருந்த 3 கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி வருகிறார்கள்.