வீடுபுகுந்து 7½ பவுன் நகை திருடிய அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி கைது


வீடுபுகுந்து 7½ பவுன் நகை திருடிய அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி கைது
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் வீடுபுகுந்து 7½ பவுன் நகைகளை திருடிய அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வீடுபுகுந்து 7½ பவுன் நகைகளை திருடிய அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

வீடு புகுந்து திருட்டு

ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகாலெட்சுமி (வயது 32). இவர்கள் ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 2-வது தெருவில் மளிகை கடை வைத்துள்ளனர். இதற்காக கணவர் தினமும் காலை அரண்மனை பகுதிக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் மகாலெட்சுமி கடையை பார்த்து கொள்வாராம். அந்த கடையின் அருகில் வசித்து வந்த காளிதாஸ் மனைவி ராஜேஸ்வரி (40). இவர் அடிக்கடி கடைக்கு வந்து பொருட்கள் வாங்கி உள்ளார். அப்போது மகாலெட்சுமியும் ராஜேஸ்வரியும் நன்றாக பழகி வந்துள்ளனர். குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாலெட்சுமி தனது கணவர் பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதால் கடையை திறக்க சென்றார். இதனை தினமும் நோட்டமிட்ட ராஜேஸ்வரி, குழந்தைகள் தூங்குவதால் வீட்டுகதவினை சாத்தாமல் மகாெலட்சுமி கடைக்கு வருவதை அறிந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகாலெட்சுமி கடைக்கு வந்ததும் ராஜேஸ்வரி அவரின் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 7½ பவுன் நகைகளை திருடினார்.

கைது

இந்தநிலையில் மகாலெட்சுமி திருமண விழாவிற்கு செல்வதற்காக நகைகளை பார்த்தபோது காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் வந்து திருடியது யார் என்று தெரியாமல் விசாரித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரி தான் காலை நேரத்தில் வந்து சென்றதாக தெரிவித்தனர். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்து மகாலெட்சுமி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜேஸ்வரியை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பண நெருக்கடியில் சிக்கியதால் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரின் கணவர் ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழி போல் பழகி குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டு அதிகாலை நேரத்தில் வீடுபுகுந்து பெண் ஒருவர் நகைகளை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story