தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு
சேலம் மணியனூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அன்னதானப்பட்டி
சேலம் மணியனூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
சேலம் மணியனூர், பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜி (வயது 58). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
விசாரணை
வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜாஜி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.