வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு- மாவட்ட செயல் அலுவலர்
ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதாக மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் கூறினார்.
ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதாக மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் கூறினார்.
சமுதாய பண்ணை பள்ளி
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், சமுதாய பண்ணை பள்ளி பயிற்றுனர்களுக்கு ஆடு, கறவை மாடு வளர்ப்பிற்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.
விழாவுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் 147 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உற்பத்தி பெருக்கம்
சமுதாய பண்ணை பள்ளி என்பது உற்பத்திக்குழு உறுப்பினர்களுக்கு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை குறித்து உரிய தொழில் நுட்பங்களின்படி பயிற்சியை வழங்கி உற்பத்தியை பெருக்குவதாகும்.
அதன்அடிப்படையில், 67 பெண்களுக்கு ஆடு, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கால்நடை துறை இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.