வேலை வாங்கி தருவதாக மோசடி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் மீண்டும் விசாரணை


வேலை வாங்கி தருவதாக மோசடி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் மீண்டும் விசாரணை
x

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை புதிதாக முதலில் இருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2011-15-ம் ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது. பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பெரும் தொகை வசூலித்து மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ், வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

அரசியல் பழி

இந்த நிலையில், தன் மீதான வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜியும், இந்த வழக்குகளை முதலில் இருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தேவசகாயமும், வழக்கை ரத்து செய்யக்கோரி சகாயராஜன், வெற்றிச்செல்வனும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமலாக்க துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், வக்கீல் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

புது விசாரணை

இதற்கு புகார்தாரர் தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், "இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டதை கணக்கில் கொள்ளாமல் புலன்விசாரணை அதிகாரி புதிதாக முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும். விசாரணை அனைத்து விதமான அம்சங்களையும் அடக்கியிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்தால் அதுதொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் விசாரணை அதிகாரி வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். பிற மனுக்களை தள்ளுபடி செய்தார்.


Next Story