கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்-மாநகராட்சி ஆணையாளரிடம் மனு
அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 47-வது வார்டு கவுன்சிலர் ஷபிஅமீர் பாத்து கொடுத்த மனுவில், "மேலப்பாளையத்தை அடுத்துள்ள கன்னிமார்குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. அந்த குளத்தின் ஓடை பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் உள்ளிட்டவையால் நிரம்பிக் கிடக்கிறது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வி.எம்.சத்திரம் கிளை செயலாளர் கனகமணி கொடுத்த மனுவில், "38-வது வார்டுக்கு உட்பட்ட வி.எம்.சத்திரம் பகுதி அப்துல் ரகுமான் முதலாளி நகர், வி.வி.நகர், விஜய் நகர், காவிரி நகர், ஆதித்தனார் நகர், சரண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். 38-வது வார்டில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சீனிவாசன் நகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைத்திட வேண்டும். ஹவுசிங் போர்டு 1-ல் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு இரும்பு வலையினால் மூடி அமைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.